அனைத்து வாசக உறவுகளுக்கும் வணக்கம்,
ஈழத்திருநாட்டின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் கொண்டவள் நான். உங்கள் எல்லோரையும் போன்று சிறு வயது தொடங்கி வாசிப்பது மிக மிகப் பிடிக்கும். காலவோட்டத்தில் மடைமாறி எழுத ஆரம்பித்திருந்தேன். இன்று எழுத மிக மிகப் பிடித்திருக்கிறது.
வயிறு நிறைய உண்ட பிறகும் அடி நாக்கில் அதன் சுவை தேங்கியே கிடப்பது போன்று, நமக்குப் பிடித்த விதமாய் ஒரு கதை அமைந்து, அதை வாசித்தபிறகும் அதுபற்றிய அசைபோடல்கள் நமக்குள் எப்படி நம்மை அறியாமல் நிகழ்ந்துகொண்டிருக்குமோ அப்படி, என் கற்பனையில் ஒரு காட்சியைக் கண்டு ரசித்து, அதை எழுத்தில் வடிப்பதில் மிக மிகப் பிடித்திருக்கிறது.
என்னையும் என் எழுத்தையும் பிரிப்பது அத்தனை இலகுவன்று என்று நானே நினைக்குமளவிலான ஒரு பித்து நிலை. அந்தப் பித்து நிலையிலிருந்து என்னைப் பாதிக்கும் நிகழ்வுகளை, நான் கேட்டறிந்த விசயங்களை, நான் காணும் அழகான காட்சிகளை எல்லாம் ஒன்றாக்கி, அதற்குக் கற்பனை எனும் சுவையூட்டியைச் சேர்த்து, ஒரு பாத்திரத்திலிட்டு, உங்கள் வாசிப்புப் பசிக்கு விருந்தாக்குவதில் அத்தனை சந்தோசம்.
என் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் உட்பட்டு, வாழ்வியலின் அறத்தை முடிந்தவரையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நீங்கள் எல்லோரும் தரும் ஆதரவும் அன்பும் அளப்பரியது.
அதற்கு மிக்க மிக்க நன்றி!
நட்புடன் நிதனிபிரபு